செம்மல் – வீரர் – செயலாளர்
அஞ்சா நெஞ்சுடன் எத்தகைய தியாகத்திற்கும் தன்னை ஒப்படைத்துள்ள "செம்மல்" அவர். கள்ளமில்லா நெஞ்சுடன் கனிவான சொல்லுடன் இயக்கத்தின் வலிமைக்கும். பொலிவுக்கும் துணை நிற்கும்"செயலாளர்" அவர். இனப்பற்றை, மொழிப்பற்றை காப்பாற்றும் ''வீரர்'' - நம் மன்னை.
– பேராசிரியர் க.அன்பழகன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் – 21.09.1975)
இனப்பகைவருக்கோர் எரிகோல்
சிலர் உலகம் அழிந்தாலும் வாழ்கிறார்கள் அவர்களை உலகத்தில்"மன்னி நிலைப் பெற்றவர்கள்" என்று இலக்கியம் புகழும் - இந்த இலக்கியச் சிந்தனைக்கு செயல் வடிவமாக நம் தலைமுறையில் ஒரு "மன்னை" வாழ்கிறார்.
– தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தலை காத்த தங்கம்
சுயமரியாதை இயக்க தொண்டனாய் ஆரம்பித்து, ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக வளர்ந்து, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்து "தளபதி மன்னை"- நான் தலைமறைவாய் இருந்த காலத்தில் தங்குமிடம் தந்து தாராளமாய் பல உதவிகள் செய்த "மாமனிதர் மன்னை"- துன்பத்தில் துணை நிற்கும் 'தூயவர்"
– மணலி சி.கந்தசாமி - எம்.எல்.ஏ.கம்யூனிஸ்ட்
இயக்கம் காத்த தளபதி
பார்வைக்குச் சிம்மம் - பழகுவதற்கு பசு, சாதி மதத்தில் சிக்காதவர் - மூடநம்பிக்கையை முடக்கியவர்
சிம்மாசனத்திலும் அமருவார் - சிறைக்குள்ளும் உலவுவார்
“அரசியல் என்றால் நாணயம் - நாணயம் என்றால் மன்னை"
– தந்தை பெரியார்
என்னை மயக்கிய மன்னை
அன்னையின் பாச நெஞ்சம்
அழகியின் சிரிப்பு வண்ணம்
தென்னையின் நிமிர்ந்த கொள்கை
சேவையில் பரியின் வேகம்
பின்னையோர் உவமை யில்லா
பெருந்தொண்டன் தலைவ னாக
மன்னையார் வளர்ந்து, இன்று
மந்திரி பதவி பெற்றார்.
இவர்க்கிது நியாயம் என்று
எவருமே உரைக்கும் வண்ணம்
அவர்க்கிது கிடைத்த தேனும்
அகந்தையில் லாமற் காத்து
சுவர்க்குறிச் சித்தி ரம்போல்
தூய்மையாய் விளங்கு கின்றார்!
எவர்க்குமே நண்ப ரான
இனியவர் வாழ்க! வாழ்க!
– கவியரசர் கண்ணதாசன்
மாற்றாரும் போற்றும் மாண்புடையவர் -சீறிப்பாயும் சிறுத்தை
*திராவிட இயக்க கொள்ளைகளை வேறூன்றச்செய்து. அவற்றை ஆல் போல் தழைத்து நிற்கச் செய்த பெருமைக்குரியவர்களில் குறிப்பிடத்தக்கவர். கொண்ட கொள்கையை கண்ணிமைபோல் கட்டிக்காத்து, வளர்த்து வந்த தலையாய வீரர்களில் ஒருவர். தொண்டனுக்குத் தொண்டனாக, செயல் வீரர்களுக்குத் தலைவனாக, கொள்கைக்குத் தீங்கு வரும்போது சிறுத்தையெனச் சீறிப்பாய்பவர்.
* ஆடம்பரத்திற்கோ, ஆரவாரத்திற்கோ சிறிது கூட இடம் அளிக்காமல், அடக்கத்திற்கும் அமைதிக்கும் இருப்பிடமாகத் திகழ்பவர். நீதிக்குப் பரிந்து பேசுவர். நேர்மைக்கு உடந்தையாக நிற்பார். நாணயப்பண்பிற்கு மதிப்பளிப்பார், அவர் எல்லோராலும் விரும்பப்படும்
ஒரு முழு மனிதராவார்" - நம் மன்னை
டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் (கல்வி அமைச்சர், தமிழக அரசு - 1975)
தமிழக அமைச்சராக
பெரியவர் மன்னை ப.நாராயணசாமி
அவர்கள்
கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள். சமூகப் பணிகள்
- பாமணி உர ஆலை
- இராசகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி
- இராசகோபாலசுவாமி திருமண மண்டபம்
- நவீன அரிசி ஆலை (MRM) சுந்தரக்கோட்டை
- அரசு மருத்துவமனை விரிவாக்கம்
- நீர்த்தேக்கத் தொட்டிகள்
- இழுவை பணிமனை (டிராக்டர் ஓர்க்ஷாப்)
- மாமன்னர் இராசராச சோழனுக்கு அரசு சார்பாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் சிலை அமைக்க பெரும் பங்காற்றியவர்
- தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவை வேளாண்மைப் பல்கலைகழகத்தில், வேளாண்மை பொறியியல் பட்டபடிப்பு (B.E. Agn) மற்றும் தோட்டக்கலை பட்டபடிப்பு (B.Sc. Horti) தொடங்க செய்தவர்
- தொழிற்சங்கம்(LPF) தோற்றுவித்த பெருமைக்குரியவர்
- *வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தபோது பெருமைமிக்க 'சென்னை அண்ணாநகரை உருவாக்கி, விரிவாக்கம் செய்தவர்
- கீழ்வெண்மணி கொடுமைச் சம்பவத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியவர்
- காவிரிநதி நீர் பிரச்சனைக்கு உச்சந்திமன்றத்தில் விவசாயிகள் சார்பாக முதன்முதலில் சட்ட போராட்டம் தொடங்கியவர்
- நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தை செல்வாக்கை தன் அரசியல் நெறியால் நொறுக்கியவர். இச்செயல் அவரின் 'அரசியல் ஆளுமைக்கு'ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.